Tuesday, July 30, 2013

டிராகுலாவுடன் ஒரு டின்னர் - 01



“The oldest and strongest emotion of mankind is fear, and the oldest and strongest kind of fear is fear of the unknown.” 
- H.P. Lovecraft

In the very beginning… 

மனிதனின் ஆதி உணர்வுகளில் ஒன்று அச்சம். அது புனைவுகளில் சித்தரிக்கப்படும் போது சுவாரஷ்யமாகவும் ஒருவிதமான இருண்மை தன்மைவாய்ந்த பயத்தையும் ஒருங்கே தருகிறது. இதை நாம் ப்ராம் ஸ்டோகரின் டிராகுலா, கோயாவின் கறுப்பு ஓவியங்கள், ஹிட்ச்காகின் சைகோ, டேனி எல்ப்மனின் அமானுஷ்ய இசை போன்றவற்றில் மிக துலக்கமாக அவதானிக்கலாம். 

கதைசொல்லல் மரபின் தோற்றம் முதலே மனிதனுக்கு பரிச்சயம் இல்லாத அல்லது அவனால் புரிந்துகொள்ள முடியாத இயற்கை நிகழ்வுகளை அல்லது புதிய பிரதேசங்கள், காடுகள், மலைகள், கடல், பாலை நிலங்களில் அலைந்து திரிந்து கண்ட, கேட்ட விடயங்களை கதைகளாகவும் பாடல்களாகவும் ஓவியங்களாகவும் பதிந்து வைத்தான். தொன்மங்கள், நாட்டாரியல், குகையோவியங்கள் இன்னும் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படும் மரபுகளில் இருந்து இதனை நாம் கண்டுகொள்ளலாம். இவை நிலப்பரப்புகளுக்கிடையில் மாறுபட்டும், வேவ்வேறு விதமான வகைகளிலும், அவற்றுக்கேயுரிய தனித்துவத்துடனும் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் பல்வேறு கலாச்சாரங்களில் இருக்கும் ஒத்த கூறுகளையுடைய கதைகளும் அவற்றில் நடமாடித்திரியும் ஜீவன்களும் இருப்பதையும் நாம் பார்க்கலாம். உதாரணமாக டிராகன்கள் ஐரோப்பிய தொன்மங்கள், மாயன் அஸ்டெக் நாகரீக கல்வெட்டுகள், சீனாவின் ஓவியங்கள், பாரசீக பண்டைய இலக்கியங்கள் இவைகளில் பறந்து கொண்டும், நீந்திக் கொண்டும், காடுகளிலும் மலைகளிலும் நெருப்பை சுவாசித்துக்கொண்டும் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பண்டைய இலக்கியங்களில் ஒன்றாக கருதப்படும் Beowulf கதைப்பாடல், அரேபிய கதைகளின் தொகுப்பான ஆயிரம் இரவுகள் ஓர் இரவு, கிழக்காசிய நாடுகளில் காணப்படும் பேய்க்கதைகள், ருஷ்ய நாட்டார் மரபின் பாபா யாகா இவற்றின் அடியே தோன்றிய டீராகுலா, Werewolf, சூனியக்கார கிழவி இன்னும் பல பேய்களை கருவாகக் கொண்டு நிறைய இலக்கியங்கள் தோன்றின. மற்றொரு வகையில் விஞ்ஞான கோட்பாடுகள் எழுப்பிய கேள்விகளை வைத்து உருவாகிய மேரி ஷெல்லியின் மன்ஸ்டர். ஸ்டிவன்ஸனின் மிஸ்டர் ஹைட், வெல்ஸின் டாக்டர் மூரே மற்றும் வேற்றுகிரகவாசிகள் என்ற ஹாரர் வகைமையும் தோன்றியது. இது பிற்பாடு விஞ்ஞான புனைவுகளாக மாற்றம் கொண்டது. Edgar Allan Poe, Marry Shelly, R.L. Stevenson, H.G. Wells, Bram Stoker, H.P. Lovecraft … போன்றவர்களை இவ்வகை இலக்கியத்தின் முன்னோடிகளாக கொள்ளலாம். மனிதனின் அகவுலக பயத்தை சித்தரித்தில் எட்கர் அலன் போ முக்கியமானவர். அவரின் படைப்புகளில் காணப்படும் இருண்மை மனிதனின் பய உணர்வை அப்படியே கண்முன் நிறுத்தியது. மனிதனிடம் இயல்பாய் வெளிப்படும் பய உணர்வு சார்ந்த கதைகள் தனியாக வீட்டில் இருக்கும் போது, அசையும் திரைச்சீலைகளின் பின்னால் என்ன இருக்கின்றது, கதவு மெதுவாக சாத்தப்படும் போது உண்டாகும் ஒலி, பழைய தரையில் நடக்கும் போது உண்டாகும் எதிரொலி, நள்ளிரவு கடிகார டிக் டிக் என்று அமானுஷ்யம் பிடித்துக்கொண்ட வீடுகளாகவும், தனியான ஒரு பயணத்தின் போது எதிர்ப்படும் முன்பின் தெரியாத நபர் பற்றிய பயங்களாகவும், தூங்கும் போது தூரத்தில் கேட்கும் நாய்களின் ஓலமாகவும், இறந்தவர்களின் புகைப்படங்களின் கண்களும் (ஏன் கழிவறையிலிருந்து வந்து தூக்கிச் செல்லும் மன்ஸ்டர்களும்) என்று இந்த இலக்கியங்கள் அதற்கேயுரிய உலகை கொண்டிருந்தன. இவ்வாறான தொன்மங்கள், நாட்டாரியல் மரபுகள், காதிக் நாவல்கள் போன்ற இலக்கிய பின்னணியிலிருந்து திகில் சினிமாவின் தோற்றம் உருவாகியது. சினிமாவின் வேறெந்த வகைமைகளையும் விட நேரடி இலக்கியத்தாக்கம் கொண்ட வகைமையாக ஹாரர் சினிமா இருக்கின்றது. இதற்கான காரணத்தை மேற்சொன்ன பின்னணியிலிருந்தும் சினிமாவின் மிகவும் ஆரம்பகால படைப்புகளிலிருந்தும் கண்டுகொள்ளலாம்.



ஜோர்ஜஸ் மெலிஸின் Le Manoir du diable (1890)  ஹாரார் சினிமாவின் முன்னோடி எனக் கொள்ளப்படுகிறது. ஹாரர் படங்களின் முக்கிய பாத்திரமான மன்ஸ்டர்களின் வருகை எடிசன் கம்பனியினால் தயாரிக்கப்பட்ட படமான Frankenstein (1910) மூலம் துவங்குகிறது.  Frankenstein’s மன்ஸ்டருக்கு பிறகு சினிமாவில் தோன்றிய மன்ஸ்டர் விக்டர் ஹியுகோவின் ஹன்ச்பெக். (Hunchback of Norte’ dame நாவலின் பாத்திர படைப்புக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை - அந்த காவிய / சோக நாயகனை அரக்கனாக சித்தரித்தது ஹாலிவூட்) இந்த பாத்திரம் பின்னர் பல படங்களில் தலைகாட்டத் துவங்கியது. ஜப்பான் சமகாலத்தில் முக்கியமான ஹாரர் படங்களையும் இயக்குனர்களையும் கொண்ட நாடு (மற்றும் ஏனைய கிழக்காசிய நாடுகளான கொரியா, தாய்வான்) ஹாரரை horrific ஆக காட்டுவதில் விற்பன்னர்கள். நாட்டுபுற பேய்கதைகளுக்கும் பேய்களுக்கும் பஞ்சமேயில்லாத நாடுகள் இவை. இங்கு திகில் படங்கள் ஆரம்பகால முதலே வரத்துவங்கிவிட்டது. அதில் Bake Jizo மற்றும் Shinin no Sosei (1898) குறிப்பிடத்தக்கவை. மேற்சொன்ன படங்கள் ஹாரர் சினிமாவுக்கான முழுமையான இலக்கணங்களை கொண்டிருந்ததாக கூறமுடியாது.

ஹாரர் சினிமாவில் பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்திய ஜேர்மன் எக்ஸ்ப்ரஸனிஸ திரைப்படங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

- Omar Sheriff 

Note: 

Thanks to Simorgh members
Thanks to திரைப்பட காதலர்கள் குழுமம்

Monday, June 17, 2013

Guillermo del Toro: ஹாலிவூடின் தனித்த பயணி



Chapter 01


ஹாலிவூடின் தனித்த பயணி 



“Demon! What are you waiting for? This is what you want, isn't it? Look at it. The last of its kind. Like you and I. If you destroy it, the world will never see its kind again... You have more in common with us than with them. You could be a king... If you cannot command, then you must obey.”

- Prince Nuada, Hellboy: the Golden Army

ஹாலிவூடின் தனித்த பயணி 

லத்தின் அமெரிக்காவின் பதியப்பட்ட வரலாறு தொடங்குவது கொலம்பஸின் “புதிய உலகு” கண்டுபிடிப்புடனேயே. அதன் பிறகான லத்தின் அமெரிக்கா காலனித்துவத்தின் வேட்டைக்காடாக உருமாற்றம் பெற்றது. இன்கா, மாயன், அஸ்டெக் போன்ற வளமிக்க கலாச்சார நாகரீக பின்னணி கொண்ட இவ்வழகிய கண்டத்தின் வரலாறு மூடி மறைக்கப்பட்டு காலனித்துவ வேட்டையர்கள் சுதந்திரப் போராளிகளாக மேற்கு வரலாற்றாசிரியர்களால் உருமாற்றம் பெற்றனர். இத்தகைய கொடுமைமிக்க 500 வருடகால வரலாற்றை அற்புதமாக விளக்குவார் Eduardo Galeano தனது Open Veins of Latin America என்ற படைப்பில். இது பழைய கதை. சமீபத்திய நிலவரம் என்ன? உண்மையில் மேற்குறித்த வரலாற்றிலிருந்து சிறிதளவேனும் மாறுபடவில்லை அது. ஸ்பெய்ன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பதில் அமெரிக்கா, காலனித்துவ அதிகாரிகளுக்கு பதில் உள்ளுர் சர்வாதிகாரிகள். நடந்த மாற்றம் இவ்வளவே. விளைவாக வரலாற்றில் ஒரு கால கட்டத்தில் செழிப்புமிக்க நாகரீகத்தைக் கொண்டிருந்த தென் அமெரிக்கா இன்று வறுமையாலும் சர்வாதிகாரத்தாலும் பொருளாதார பிரச்சினைகளாலும் சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. ஆயினும் சினிமா, இசை, இலக்கியம் இம்மூன்றிலும் உலகின் எந்த பிரதேசத்திற்கும் குறைவில்லாத வகையில் அது சாதித்துள்ளது. போர்ஹேஸ், மாக்வேஸ், ஹுலியோ கொத்தஸர், அலேஹோ காபெந்தியர் போன்ற இலக்கிய ஆளுமைகளையும் விக்தோர் ஹரா, வையலட்டா பரா போன்ற இசை மேதைகளையும் பப்லோ நெரூடா, ஒக்தோவியா பாஸ் போன்ற கவிஞர்களையும் சல்சா நடனத்தையும் சினிமாவில் ஹோர்ஹே சன்ஹீனஸ், தோமஸ் கித்தாரேஸ் அலேயா போன்ற இயக்குனர்களையும் தனது கொடையாக உலகுக்கு அளித்துள்ளது.  

Guillermo del Toro 1964 ஆக்டோபர் 9ம் திகதி மெக்ஸிகோவிலுள்ள ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். சிறிய வயதிலேயே horror வகைமை திரைப்படங்களாலும் கதைகளாலும் தாக்கமுற்றிருந்த டெல் டோரோ Monsterகளுக்கும் (எவ்வாறு தமிழ்படுத்துவது?) fairy tale, மாயாஜால உலகிற்கும் தனக்குமிடையிலான ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டார். ஆரம்ப காலங்களில் Super-8, 16mm, 35mm கேமராக்களில் குறும்படங்களை உருவாக்கினார். தனது கதைகளுக்காக Special Effects பற்றிய அறிவுப்பின்னணி இருக்க வேண்டும் என்று கருதிய டெல் டோரோ Dick Smith (The Exorcist, The Godfather, Amadeus) இன் make-up பாடநெறிகளில் பங்குபற்றினார். சிறிதுகாலம் அவருடன் பணியாற்றிவிட்டு “Necropia” என்ற தனது சொந்த Special Effects நிறுவனத்தை துவங்கினார். அதே சந்தர்ப்பத்தில் Hora Marcada (1986) என்ற மெக்ஸிக தொலைகாட்சி தொடர் ஒன்றில் பணியாற்றினார். இந்த Horror Anthologyயில் சேர்ந்து பணியாற்றிய மற்றுமொரு மெக்ஸிகன் 'அமிகோ'(நண்பன்) டெல் டோரோவின் நீண்ட கால நண்பரான Alfonso Cuaron இந்த தொடர் நிறைய பரிசோதனை முயற்சிகளில் இறங்க உதவியது. இவ்வாறான அனுபவங்களின் பின்னணியிலேயே டெல் டோரோவின் திரைவாழ்வு துவங்குகிறது.  

Cronos (1993)



டெல் டோரோவின் முதல் படம் Cronos மெக்ஸிகோவில் ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்டது. கானில் (Cannes - இந்த பிரன்சு சொல்லை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும்) Critic’s Prizeஐ வென்ற இத்திரைப்படம் ஒரு மாபெரும் எதிர்கால இயக்குனரை முன்னறிவித்தது. தனது பிற்கால திரைப்படங்களில் வரப்போகும் துணைவனையும் (Collaborationஐ எப்படிப்பா தமிழ்படுத்துவது) டெல் டோரோ இப்படத்தின் மூலம் இனங்கண்டு கொண்டார். Ron Perlman. Cronos திரைப்படம் வெம்பயர் / டிராகுலா திரைப்படங்களின் மீள் கண்டுபிடிப்பாக ஒரு புது Genre ஐ நோக்கியதாக இருந்தது. தனது Necropia ஸ்டுடியோவை Cronos படத்தில் வரும் Special Effects காட்சிகளுக்காகவே உருவாக்கியதாக ஒரு பேட்டியில் குறிப்பிடுவார் டெல் டோரோ. முக்கியமாக Cronos Device (ஒரு தங்க வண்டு வடிவில் இருக்கும் இதன் clockwork mechanism அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும்) வெம்பயர் கதைகளிலேயே ஒரு புதிய Origin ஐ கொண்ட இத்திரைப்படம் Bram Stoker மற்றும் இதுவரையில் வந்த வெம்பயர் கதைகளுக்கு விஞ்ஞானம், மெஜிக், clockwork mechanism, Alchemy, Insect Biology என்று புதியதொரு பரிமாணத்தை வழங்கியது. Eternal வாழ்வு பற்றிய மனிதனின் தீரா ஏக்கத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட பாத்திரங்களுக்கிடையில் நடக்கும் கதையே Cronos. இது பற்றி எந்த அக்கறையும் கொள்ளாத ஒரு சிறுமியும் இத்திரைப்படத்தில் இருக்கிறாள். (டெல் டோரோவை தெரிந்தவர்களுக்கு அச்சிறுமி அவரை பிரதியாக கொண்டு படைக்கப்பட்டது என்று புரியும். இதன் பிறகே ஹாலிவூடில் டெல் டோரேவின் பிரவேசம் நிகழ்கின்றது.

சர்வதேச திரையுலகில் டெல் டோரோ


Monster in the Making
அமெரிக்க கலாச்சாரம் சீரழிவுத்தன்மை கொண்ட நுகர்வு கலாச்சாரம் என்று சமூகவியலாளர்கள் வரையறுப்பர். உலகின் எந்த நல்ல விடயங்களையும் தனது நுகர்வுக்கேற்ற விதத்தில் மாற்றி அதன் சிறப்புத் தன்மைகளை ஒழித்துவிடும் அது. ஹாலிவூட் மட்டும் இதற்கு விதிவிலக்காக அமையுமா என்ன? ஐரோப்பிய மற்றும் உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தப்பட்ட கலை உன்னதங்களை தனக்கேற்றவாராக மலினப்படுத்தி எடுத்துக்கொண்டது அது. (இதன் நீட்சிதான் பாலிவூடும், கோலிவூடும்) ஹாலிவூட் திரையுலகில் நுழைந்த டெல் டோரோவை ஸ்டுடியோ அதிகாரம் தனது பிடிக்குள் கொண்டுவர முயன்றது அதிலிருந்து தன்னையும் Mimic ஐயும் காப்பாற்ற பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இப்படம் தனக்கு திருப்தியளிக்கவில்லையென கசப்புணர்வுடன் நினைவு கூறுகிறார் டெல் டோரோ. தான் காட்சிப்படுத்த நினைத்த கதைக்கும் ஹாலிவூட் Mimic ற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது என்று அவர் குறிப்பிடுவார். இத்திரைப்படம் தந்த மனவருத்தத்தால் சமீபகாலம் வரை இத்திரைப்படத்தை அவர் பார்க்கவில்லை. (கடைசியாக வந்த Director’s Cut தான் எடுக்க நினைத்ததற்கு ஓரளவு நெருக்கமாக இருந்ததாக டெல் டோரோ குறிப்பிடுவார்.)

Mimic (1997)



சூழலியல் சமநிலை குழம்பும் போது ஏற்படும் விபரீதங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட விஞ்ஞான புனைவு திரைப்படம். இரண்டு விஞ்ஞானிகள் (Mira Sorvino மற்றும் Jeremy Northam) புதிதாக பரவியிருக்கும் தொற்றுநோய்க்கான காரணிகளை (கரப்பான் பூச்சிகள்) அழிப்பதற்கு Genetically Engineered கரப்பான்களை உருவாக்குகின்றனர். குறுகியதொரு வாழ்க்கை காலத்தை கொண்டதும் மறுஉற்பத்தி (Reproduction) தன்மை அற்றதுமான இப்புதியவகை கரப்பான் இனம் மூலம் நோய்க்காரணிகள் அழிக்கப்படுகின்றன. ஆனால் இது சில வருடங்களின் பின் விபரீதமெடுக்கிறது. Insect Biology, சூழல் சமநிலை மற்றும் இசைவாக்கமடைதல், பரிணாமக் கொள்கை போன்ற டார்வினிய கோட்பாடுகளை உள்ளடக்கியிருக்கிறது இத்திரைப்படம். ஆனால் டெல் டோரோ எடுக்க நினைத்த திரைப்படமாக இது அமையவில்லை. அவரின் திரைக்கதை மதம்-விஞ்ஞானம் குறித்த மறுபார்வைகளையும் கேள்விகளையும் முழுமையாக மனிதத்தன்மை கொண்ட பூச்சியினங்களையும் (தோற்றம் - செயற்பாடுகள்) காட்சிப்படுத்தியதை ஹாலிவூட் கத்தரித்துவிட்டது. இதையும் மீறி பல காட்சிகளில் டெல் டோரோவின் கைவண்ணம் மிளிர்கிறது. (Mimic - இன்னொன்றை imitate செய்யும் அல்லது பிரதிபலிக்கும் உயிரினப்பல்வகைமையில் இவற்றுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. இடத்திற்கேற்ப மாறிக் கொள்ளும் பச்சோந்திகள், இலைகளாகவே மாறிவிடும் கும்பிடுபூச்சி என்று நீளும் இந்தப்பட்டியல்)

The Devil’s Backbone (2001)



ஹாலிவூட் தந்த கசப்பான அனுபவங்களுக்கு பிறகு உருவாக்கப்பட்ட இது. ஸ்பானிய யுத்தப் பின்னணியில் எடுக்கப்பட்ட அருமையான ghost story. விமர்சனரீதியில் மிகவும் சிலாகிக்கப்பட்ட திரைப்படம் இது. இத்திரைப்படத்தைப் பற்றிய ஒரு வரி விமர்சனம் “the saddest horror story ever”. கதையின் தளம் ஸ்பானிய சிவில் யுத்தத்தினால் அனாதையாகக்கப்பட்ட விடுதி / School இல் நடக்கிறது. யுத்தக் குரூரங்கள், haunted விடுதி அதில் நடக்கும் துர்ச்சம்பவங்கள் அனாதைச் சிறுவர்கள் இவற்றை கதை மாந்தர்களாகக் கொண்டு யுத்தத்தால் சிதறுண்டு போன வாழ்வியலையும் அதிகார வர்க்கத்தின் குரூரத்தன்மையையும் அப்பட்டமாகவும் கலாநேர்த்தியுடனும் இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படுகிறது. ராணுவ கட்டுப்பாடு போன்ற அடக்குமுறையைக் கொண்ட விடுதியில் சிறுவர்களின் சூழலை இடதுசாரி தன்மையுடன் சித்திரிக்கும் அதேவேளை சிறுவர்களின் உலகில் யுத்தம் ஏற்படுத்தும் உளவியல் பிம்பம் வாழ்வியல் பாதிப்பு என்பனவற்றை கோடிட்டுக்காட்டுவதன் மூலம் யுத்தங்கள், வன்முறை, ராணுவ அழித்தொழிப்புக் கருவிகளுக்கு எதிராக மிகப் பலம்வாய்ந்த நிலைப்பாட்டை முன்வைக்கிறார் டெல் டோரோ. ஹாலிவூட் விடலைத்தனங்கள் இல்லாத பால்யகால வாழ்வை கவித்துவமாக சித்திரிக்கிறது இத்திரைப்படம்.

டெல் டோரோ படங்களில் வரும் சிறுவர்கள் உண்மையான சிறுவர்களாகவே இருக்கிறார்கள். சாகஸத்திற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை அவர்களின் சாதூர்யமே அவர்களுக்கு கைகொடுக்கிறது. இத்திரைப்படத்தின் மூலம் சிறுவர்கள், பெரியவர்கள் அவர்களை இணைக்கும் தளங்களின் உளவியலையும் குரூரத்தையும் தனக்கேயுரிய விதத்தில் விமர்சனம் செய்கிறார். (இத்திரைப்படம் குறித்து பேசுவதெனில் அதற்கு தனிப் புத்தகம் ஒன்றே தேவைப்படும். எனினும் விலாவாரியாக தனியே பதிலிட முயற்சிக்கிறோம்.)

Blade II (2001)



இதன் பின் மீண்டும் ஹாலிவூட் திரும்புகிறார் டெல் டோரோ (I’m back). இம்முறை தான் எதிர்பார்த்தபடியே தனது படத்தை எடுக்க முடிந்தது. (The Devil’s Backbone  ஏற்படுத்திய அலையினால் ஹாலிவூட் அதிகாரம் டெல் டோரோவிடம் பலிக்கவில்லை) தனக்கு கிடைத்த சுதந்திரத்தை திறமையாக பயன்படுத்திக் கொண்ட டெல் டோரோ அதுவரையில் இருந்த ஹாலிவூட் வெம்பயர் சித்தரிப்புக்களை சிதறடித்து புதியதொரு Vampire Breed ஐ, விஞ்ஞானத்தை (Vampirism) உருவாக்கினார். Wesley Snipes நடித்து வணிகரீதியிலும் உலகெங்கும் மாபெரும் வெற்றியீட்டிய திரைப்படம் இது. Blade மற்றும் Vampire குழாம் சேர்ந்து(?) புதுவகை வெம்பயர் இனத்தை வேட்டையாடும் கதைத்தளத்தை பின்னணியாகக் கொண்டது. மேலோட்டமாக சாதாரண ஹாலிவூட் படத்தைப் போல் தெரிந்தாலும் மிக நுணுக்கமான உட்கூறுகளையும் கதைக்களத்தையும் கொண்டது இத்திரைப்படம். (இது பற்றி பின்னால் வரும் பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்.)

Hellboy (2004)



இரண்டாம் உலகப் போரின் கடைசி காலகட்டங்களில் நாஸிக்களால் செய்யப்படும் ஒரு summoning (யாகம் என்று ஓரளவு குறிப்பிடலாம்) மூலம் பூமிக்கும் நரகிற்குமான portal ஒன்றை ஏற்படுத்தி அங்கிருந்து அழித்தழின் ஏழு கடவுளர்களை (Seven Gods of Destruction - H.P. Lovecraft இன் Cthulhu Mythos பாதிப்பு இந்த காட்சியில் தென்படுகிறது) ஒன்றை வரவழைக்கும் முயற்சியில் ஈடுபடும் தருணத்தில் அவர்களின் திட்டம் Prof. Bruttenholm மற்றும் படையினரால் முறியடிக்கப்படுகிறது. இந்நிகழ்வின் பின் நரகிலிருந்து ஒரு ஜீவன் பூமிக்கு வந்து விடுகிறது. அதனை Prof. Bruttenholm எடுத்து வளர்க்கிறார். அவன் பெயர் Hellboy. இதன் பின்னர் சாகஸங்கள், காதல், வரலாற்று மர்மப்படுத்தல்கள் என கதை பயணிக்கிறது. Mike Mignola வின் ஹெல்பாயிற்கும் டெல் டோரோவின் திரைப்படத்திற்கும் பாத்திரப்படைப்பில் பெருத்த வேறுபாடுள்ளது. நகைச்சுவையுணர்வு, முரட்டுத்தனமான புத்திசாலித்தனம், காதல் போன்ற நுன்ணுணர்வுகள் டெல் டோரோவின் சேர்க்கையே. இவ்விடத்தில் ஒன்றை கூற வேண்டும் ஹாலிவூடில் என்ன வியாபார அம்சங்கள் இருந்தாலும் கதைக்கும் கதையாசிரியருக்கும் ஹாலிவூட் மிகவும் மதிப்பளிக்கும்.  அவ்வகையில் ஏராளமான திரைப்படங்கள் பல்வேறு நாவல்களின் adaptation களாக வந்துள்ளது. இருந்தாலும் அத்திரைப்படங்களில் நாவல்களைத் தாண்டி தனது முத்திரையை (Master Touch) பதிப்பது Stanley Kubrick, Martin Scorsese, Alfred Hitchcock போன்ற வெகு சிலரே. அவ்வரிசையில் நமது டெல் டோரோவையும் இணைத்துக் கொள்ளலாம். (Hellboy பற்றி மிகச்சிறப்பான ஒரு பதிவை எழுதியுள்ளார் ராஜேஷ், இதை இங்கே க்ளிக்கி படிக்கலாம்)

Pan’s Labyrinth (2006)  



The Devil’s Backbone ஸ்பெய்ன் உள்நாட்டு யுத்தத்தை ஒருவாறு சித்தரித்தது என்றால் Pan’s Labyrinth பிரிதொரு வகையாக அதை உருவாக்கிக் காட்டியது. ஒரு சிறுமியின் பார்வைக் கோணத்தில் இப்படம் திரையில் விரிகிறது இது டெல் டோரோவின் இடது சார்பு கொண்ட அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. மாய உலகும் யதார்த்த உலகும் பின்னிப்பிணைந்த ஒரு கலை மேதமைமிக்க Master Piece ஆகவே இதனை விமர்சகர்கள் புகழ்கிறார்கள். Fantasy மற்றும் fairy tales போன்றவை உருவானதற்கான காரணங்களை பல்வேறுபட்டதாக கூறுவர் மானிடவியலாளர்களும் சமூகவியல் அறிஞர்களும். (மிக நீண்ட ஆய்வை வேண்டி நிற்பதால் அவை பற்றிய கருத்துக்களை இவ்விடத்தில் தவிர்க்கிறோம்.) நடைமுறையில் அவை நிகழ்கால உலகின் குரூரங்களிலிருந்தும், வன்முறைகளிலிருந்தும் எமக்கு பெரும் ஆசுவாசமளிக்கின்றது. சிறுவர்கள் தங்களுக்கென பிரத்தியேகமான ஒரு மாயஉலகை உருவாக்கி அதில் கலந்து விடுகின்றனர். அவ்வகையிலேயே இத்திரைப்படத்தில் Ofelia தனது மாய உலகை கண்டு கொள்கிறாள். (இது அவளின் கற்பனையா? அல்லது நிஜமா? என்பது பார்வையாளர்களின் முடிவுக்கே விடப்படுகிறது.)



டெல் டோரோவிற்கு fantasy மற்றும் fairy tales மீதான மகத்தான ஆளுமையை இத்திரைப்படத்தில் கண்டு கொள்ளலாம். அவ்வகையில் அபரிமிதமான ஈடுபாட்டுடனும் நுணுக்கமான அறிவுடனும் படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வரும் சிறுமி தனது பால்யத்தின் பிரதிபலிப்பே எனக் குறிப்பிடுவார் டெல் டோரோ. இத்திரைப்படத்தில் வரும் Faun டெல் டோரோவின் சொந்த version (பிரதி என்று மொழியாக்கலாமோ?) என்பது குறிப்பிடத்தக்கது.  

Hellboy II The Golden Army


The Epic War
Guillermo del Toro வின் மிகுந்த முக்கியத்துவமும் பெரும் வரவேற்பையும் கொண்ட திரைப்படம் இது. உண்மையில் டெல் டோரோ பற்றி தெரிந்து கொள்வதற்கு The Devil’s Backbone, Pan’s Labyrinth மற்றும் The Golden Army ஆகிய இம்மூன்று திரைப்படங்கள் பற்றிய முழு விபரங்களையும் படித்தாலே போதுமானது. (டெல் டோரோ தனக்கு பிடித்தமானவை என இம்மூன்று திரைப்படங்களையுமே குறிப்பிடுவார்)

ஹெல்பாய் முதல் பாகத்திலிருந்து விலகியதாக தொடர்பற்று அமைந்துள்ளது Golden Army. முதல் படத்தில் ஹெல்பாயின் Origin பற்றி கூறப்படுகிறது என்றால் இத்திரைப்படம் Nuada என்ற வன இளவரசனுக்கும் ஹெல்பாய்கும் இடையிலான போராட்டத்தை கதைக்களனாக கொண்டுள்ளது. இதில் பாத்திரங்கள் மிக விரிவான பின்னணியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் மனோநிலை அவர்களுக்கிடையிலான உறவுகள் என்றும், வனக்கடவுள், பாதாள உலகம், fairy tale என்று இன்னொரு பக்கம் அதற்கிணையான கதைத்தளத்தில் இத்திரைப்படம் பயணிக்கிறது. குறிப்பாக டெல் டோரோ தனது மாய உலகை அச்சு அசலாக இதில் பிரதி பண்ணியிருப்பார். இதில் வரும் தொன்ம உயிரினங்கள், monsters போன்றவை டெல் டோரோவின் கைவண்ணமே. Mythologies  மற்றும் fairy tales உலகங்களின் இணைந்த கதை சொல்லல் முறையே இதன் சிறப்பம்சம்.

Prince Nuada
Golden Army இன் கதை இதுதான், முன்னொரு காலத்தில் வன உலகிற்கும் மனிதனுக்குமிடையிலான நீண்ட கால யுத்தம் நடக்கின்றது. வன அரசனுக்கு உதவ Golden Army என்ற Magical / Mechanical ராணுவமொன்று உருவாக்கப்படுகிறது. அதன் விளைவு மிகப்பயங்கரமாக இருக்கிறது உயிரிழப்புகள் அதிகரிக்க, கலங்கிய வன அரசன் யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறான். ஒரு ஒப்பந்தம் நிகழ்த்தப்படுகிறது. வனமும் அது சார்ந்த இடங்களும் எமக்குரியது மற்றயவை மனிதர்களுக்கு. இதில் யாரும் அத்துமீறிவிட முடியாது. Nuada விற்கு இதில் உடன்பாடு இல்லை 'மனிதர்கள் மாறு செய்வார்கள்' எனக் கூறி பிரிந்து செல்கிறான். யுகங்கள் கடக்கின்றன. The Golden Army ஐ திரும்ப கொண்டு வந்து வன உலகை காப்பாற்ற விழைகிறான் Prince Nuada  இதனை தடுக்க Hellboy and Co. போராடுகிறது. (இப்படத்திலுள்ள சில காட்சிகளை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்)

- Omar Sheriff / Lafees Shaheed

குறிப்புகள்:

  1. கட்டுரையில் வரும் பல குறிப்புகள் ஆங்கில மூலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கலாச்சாரத்தைச் சேர்ந்த சொற்களை அதற்கேயுறிய சிறப்புச் சொற்களாகவே கருதப்பட வேண்டும் அதை இன்னொரு மொழியில் பெயர்ப்பது கடினம். இது எல்லா மொழிகளிலும் உள்ள பொதுவான விடயமே. அச் சொற்களின் உண்மையான பொருளை அறிய அக்காலாச்சாரப் பின்னணி பற்றிய அறிவு அவசியம். ஒருவகையில் உலக சினிமாவும் இலக்கியங்களும் இவற்றையே செய்கின்றது.
  2. Guillermo del Toro வின் திரைப்படங்களில் செயல்படும் கலாச்சார, சமூக பின்னணிகளை இரண்டாம் பாகத்தில் அறியலாம்.
  3. இரண்டாம் பாக முடிவுடன் இக்கட்டுரைக்கான References வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்.