Sunday, June 2, 2013

Schindler’s List & the Pianist: நம்பிக்கையின் ஒளிக்கீற்று

சென்ற நூற்றாண்டு மனித இனம் இதுவரை கண்டறியாத மாபெரும் கொலைகளமாகிவிட்டது. சரித்திரம் இரு உலக யுத்தங்களுக்குள் மூழ்கி வெளிவந்தது. ஏகாதிபத்தியங்கள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் மீது பொருளாதார சுரண்டலையும் அரசியல் வன்முறையையும் பண்பாட்டு ஒடுக்குமுறையையும் பேரளவில் கட்டவிழ்த்து விட்டன. "நாகரீக" உலகத்தை சேர்ந்த அநாகரீகமான அரசியல் சூதாடிகள் இந்நாடுகளின் பாசிச, ராணுவ சக்திகளை தம் அடியாட்களாகக் கொண்டு மூன்றாம் உலகை பெரும் வேட்டைக் காடாக மாற்றினர். சீனமும் கிழக்கு ஐரோப்பாவும் அளித்த அதிர்ச்சியோ இதைவிட மோசமானது. அது மனிதனின் விடுதலை என்ற கனவில் மீது தன் இரத்தச் சேற்றைப் பூசியது. சோஷலிஸம், கம்யுனிஸம் என்ற சொற்கள் எவற்றிக்கு எதிரான அர்த்தங்களை வெளிப்படுத்தினவோ அவற்றையே தம் சாராமாக்கிக் கொண்டு பைசாசமாகி பாய்ந்தன. தத்துவங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் அமைப்புகளுக்கிடையிலான வித்தியாசங்களும் பொய்த்துப்போயின. அதிகாரத்திற்கும் மனிதனுக்குமான போராட்டமே மிஞ்சி நின்றது. கலையும் இலக்கியமும் இதை எதிர் கொண்டன. நெறிக்கப்படும் குரல்வளைகளிலிருந்து நெறிக்க முடியாத மனிதக் குரல் மேலெழுந்தது.  ("எப்போதும் வாழும் கோடை"யிலிருந்து, மனுஷ்ய புத்திரன்)


இந்த சூழமைவில் அதாவது இன அழிப்பு, இன வெறுப்பு, யுத்தங்கள், அழிவு பின்னணியில் எழுந்த இலக்கியமும் கலைப்படைப்புகளுமே உலக அரங்கில் சாஸ்வதமாகி மேன்மைவாய்ந்த கலைப்படைப்புகளாக பெயர் பெற்று திகழ்கின்றன. நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பின் பிறகான சமூக அவலங்ளை சொல்லும் லியோ டால்ஸ்டாயின் War and Peace, பிரான்ஸிய புரட்சியின் சமூக, கலாச்சார தாங்கங்களை நுட்பமாக விவரிக்கும் விக்டர் ஹியூகோவின் Les Misérables, அல்ஜீரியாவில் பிரன்ஞ்சு காலனித்துவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையும் கலாச்சார ஒடுக்குமுறையும் அப்பட்டமாகவும் கவித்துவமாகவும் விவரிக்கும் ஜிலோ பென்கார்வேயின் The Battle of Algiers, போன்ற நாவல்களையும் திரைப்படங்களையும் இதற்கான மிகச் சிறப்பான உதாரணங்களாக குறிப்பிடலாம். (மற்றைய மகத்தான படைப்பாளிகளான தஸ்தாயோஸ்கி, இங்மர் பெர்க்மன், ஹோர்ஹே சான்ஹீனஸ் போன்றவர்களின் படைப்புகளை குறிப்பிடாததற்கு அவர்கள் மன்னிப்பார்களாக)



இந்தவகையில் இம்முறை பார்க்கவிருக்கும் திரைப்படங்கள் யூத இன ஒழிப்பை  (Holocaustபின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அற்புதமான இரண்டு திரைப்படங்கள் Schindler’s List மற்றும் The Pianist. (இவ்விடயத்தில் இடைச்செருகளாக ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும் எமது சமூகம் 30 வருட காலமாக யுத்தத்தாலும் பேரினவாதத்தாலும் கடும் பாதிப்புக்குள்ளானது. ஆனால் அதனடிப்படையில் உருவாகியுள்ள கலை / இலக்கிய படைப்புக்களை தேடிப்பார்த்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது) 

முதலில் Schindler’s Listக்கு வருவோம். இது இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் போலாந்தின் Krakow நகரில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. Oskar Schindler என்ற மனிதநேயமிக்க உயர்வர்க்க பணக்காரரின் வாழ்வை விபரிக்கிறது. ஹிட்லரின் நாஸிப் படை போலந்தை கைப்பற்றி அங்குள்ள யூதர்களை கொடூரமாக கொன்று குவிக்கிறது ஷின்ட்லர் நாஸிப் படையினரின் கொலைக்களத்திலிருந்து தம்மால் முடியுமான யூதர்களை (ஏறத்தாழ 1200) காப்பாற்றுகிறார்.

Pianist இன் கதையும் இது போன்றே போலாந்து யூதர்கள் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் நாஸி படையினரின் கொடூரமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொன்று குவிக்கப்பட்டதை விபரிக்கிறது. Władysław Szpilman என்ற பியானோ கலைஞன் தனது குடும்பத்தை நாஸிகளிடம் பரிகொடுத்த நிலையில் 6 வருட காலமாக தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபடுகிறான். இதிலும் ஒரு நாஸி ராணுவ அதிகாரி இவன் உயிர்த்தப்பி வாழ்வதற்கு உதவுகிறான்.

இரண்டு திரைப்படங்களிலும் பல விடயங்களில் ஒத்த கூறுகளை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போர், போலந்து, யூத இன ஒடுக்குமுறை, நாஸிக் கட்சியினரின் மனித விரோத செயல்கள், யூதர்களை காப்பாற்றும் மனிதாபிமானமிக்க நாஸிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடலாம். ஆனாலும் இரண்டு கலை மேதமைமிக்க படைப்புகள் என்ற வகையில் பல்வேறுபட்ட காட்சியமைப்புகளையும் குறியீட்டு அம்சங்களையும் கொண்டுள்ளது. ஷேக்ஸ்பியர் போன்ற மேதைகளின் படைப்புகளில் காணும் காவிய தருணங்களை (nuances) இவ்விரண்டு திரைப்படங்களிலும் காணலாம். உதாரணமாக Pianist நாஸிகளிடமிருந்து தப்பித்து ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஜெர்மனியர்களுக்கு மத்தியில் மறைந்து வாழ்கிறான் தீவிரமான இசைக் கலைஞனான அவனது அறையிலோ ஒரு பியானோ காணப்படுகிறது. ஆனால் அதை வாசித்தால் உயிர் போகும் என்ற நிலை. அப்போது அவன் அப்பியானோவை நினைவில் இருந்தே வாசிக்கிறான் இசை வெள்ளமாக வழிகிறது. மாபெரும் காவிய சோகம் ததும்பும் காட்சியிது. 


Schindler’s List இல் யூதர்கள் வாழும் ஓர் அபார்ட்மென்டில் நாஸிகள் புகுந்து கண்மூடித்தனமாக சுடுவர். அத்தருணத்தில் நாஸி அதிகாரி ஒருவன் அங்கிருக்கும் பியானோவை இசைத்துக் கொண்டிருப்பான். அப்போது நாஸி படையினைச் சேர்ந்த ஒருவன் 'இது பாக் ஆ அல்லது மொஸார்டா?' என்று கேட்பான். இது மனித மனத்தின் மிருகத்தனத்தின் வெளிப்பாடா அல்லது உளவியல் குழப்பமா என்று பார்வையாளர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் காட்சியிது.    

மனித வரலாற்றில் யூதப் படுகொலைகளுக்கு நிகரான மிலேச்சத்தனங்கள் மிகச் சிலவே குறிப்பிட்டுக் கூற முடியும். அப்படிப்பட்ட கதைக் கருவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படங்கள் எவ்வளவு குரூரமாகவும் நம்பிக்கை வரட்சியையும் கொண்டிருக்க வேண்டும்? மாற்றாக இத்திரைப்படங்கள் முன்வைப்பது நம்பிக்கைக்கான பாதையை அதன், ஒளியை. அதுவே இத்திரைப்படங்களின் கலை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றிக்கு காரணமாகியுள்ளது.  

  
உதாரணமாக  Pianist இல் வரும் இந்த காட்சியை பாருங்கள். 

Chopin's Ballad
 
நீண்டநாள் பட்டினி கிடந்த இசைக் கலைஞன் கடைசி முயற்சியாக ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறான். அவனுக்கு டின்னில் அடைக்கப்பட்ட ஏதாவொரு உணவுப் பொருள் கிடைக்கிறது. அதை திறக்க முற்படும் போது சத்தம் கேட்டு ஒரு நாஸி அதிகாரி வந்து விடுகிறான். Pianist இதுவே எனது கடைசி தருணம் என்று நினைக்கும் போது அந்த நாஸி அதிகாரி அவனை யார் என்று கேட்கிறான். தான் ஒரு Pianist என்று பதில் கூறியதும் அவ்விடத்திலுள்ள பியானோவை தனக்காக வாசித்து காட்டுமாறு கூறுகிறான். அப்போது அவன் பியானோவில் Chopin’s Ballade ஐ வாசிக்கிறான். இக்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளியமைப்பும் இசைக்கோர்வையும் அவதானியுங்கள் அவ்விறுதி நேரத்திலும் வாழ்வுக்கான உந்துதல் இசைக் கலைஞனின் முகத்தில் இழையோடும். அவனின் இசையைக் கேட்ட அந்த நாஸி அதிகாரி அவனை கொல்லாமல் மறைவிடம் ஒன்றை காட்டிவிட்டுச் செல்கிறான். Schindler’s List இல் இந்த ஒளிக்கீற்றாக Oskar Schindler இன் பாத்திரம் அமைந்துள்ளது. 

இத்திரைப்படங்களில் பின்நவீனத்துவ கோட்பாட்டாளர் Roland Barthes  முன்வைக்கும் கருத்தாக்கமான Pleasure of the Text ஐ துலக்கமாக அவதானிக்கலாம். அதாவது குரூரமோ வன்முறையோ அல்லது கொண்டாட்டமோ இவற்றை முன்வைக்கும் எந்தப் படைப்பானாலும் நமக்கு ஒரு துய்ப்பு உணர்வை தரவேண்டும். அதனை இங்கு மிகச் சிறப்பாக கண்டுகொள்ளலாம். அதற்கு மிகப்பெரும் பக்கபலமாக இருப்பவை இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் தேர்ந்த நடிப்பு மற்றும் மிகச் சிறப்பான இயக்கம். 

அதிலும் மிகக் குறிப்பாக இசையும் ஒளிப்பதிவுமே பெரும் பங்காற்றியுள்ளது. Schindler’s Listஇக்கு பின்னணி இசையமைத்திருப்பவர் மாபெரும் Composer John William, இப்படத்துக்காக theme இசைக் கோர்வையை வாசித்திருப்பது இஸ்ரேல் நாட்டுவயலின் மேதை Itzhak Perlman. கறுப்புவெள்ளையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருப்பவர் Janusz Kaminski.

Pianist க்கு தேர்ந்த இசையை வழங்கியிருப்பவர் Wojciech Kilar. Powel Edelmanஇன் ஒளிப்பதிவு இரண்டாம் உலக யுத்தத்தைக் கண்முன் கொண்டுவருகிறது.

யூதர்களுக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த கொடுமையை முன்வைத்து தற்போதைய இஸ்ரேல் பலஸ்தீனில் கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்பை நியாயப்படுத்திவிட முடியாது; கூடாது. அதேபோல் தற்போதைய இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினையை முன்வைத்து ஹிட்லரின் யூதப் படுகொலையை சரிகண்டு விடமுடியாது. எவ்வாறாயினும் இத்திரைப்படங்கள் சக மனிதனை நேசிப்பதற்கும் அவனது உணர்வுகளை புரிந்துகொள்வதற்கும் இன்னும் நீதியான சமூக அமைப்புக்கான போராட்டத்திற்குமான காட்சிபடிமங்களாகவே திகழ்கின்றது. 


- Lafees Shaheed / Omar Sheriff


References
  1. நான் பார்த்த சினிமா: Schindler’s List, சாரு நிவேதிதா
  2. நான் பார்த்த சினிமா: The Pianist, சாரு நிவேதிதா
  3. Wikipedia 

No comments:

Post a Comment