Tuesday, July 30, 2013

டிராகுலாவுடன் ஒரு டின்னர் - 01



“The oldest and strongest emotion of mankind is fear, and the oldest and strongest kind of fear is fear of the unknown.” 
- H.P. Lovecraft

In the very beginning… 

மனிதனின் ஆதி உணர்வுகளில் ஒன்று அச்சம். அது புனைவுகளில் சித்தரிக்கப்படும் போது சுவாரஷ்யமாகவும் ஒருவிதமான இருண்மை தன்மைவாய்ந்த பயத்தையும் ஒருங்கே தருகிறது. இதை நாம் ப்ராம் ஸ்டோகரின் டிராகுலா, கோயாவின் கறுப்பு ஓவியங்கள், ஹிட்ச்காகின் சைகோ, டேனி எல்ப்மனின் அமானுஷ்ய இசை போன்றவற்றில் மிக துலக்கமாக அவதானிக்கலாம். 

கதைசொல்லல் மரபின் தோற்றம் முதலே மனிதனுக்கு பரிச்சயம் இல்லாத அல்லது அவனால் புரிந்துகொள்ள முடியாத இயற்கை நிகழ்வுகளை அல்லது புதிய பிரதேசங்கள், காடுகள், மலைகள், கடல், பாலை நிலங்களில் அலைந்து திரிந்து கண்ட, கேட்ட விடயங்களை கதைகளாகவும் பாடல்களாகவும் ஓவியங்களாகவும் பதிந்து வைத்தான். தொன்மங்கள், நாட்டாரியல், குகையோவியங்கள் இன்னும் பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படும் மரபுகளில் இருந்து இதனை நாம் கண்டுகொள்ளலாம். இவை நிலப்பரப்புகளுக்கிடையில் மாறுபட்டும், வேவ்வேறு விதமான வகைகளிலும், அவற்றுக்கேயுரிய தனித்துவத்துடனும் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் பல்வேறு கலாச்சாரங்களில் இருக்கும் ஒத்த கூறுகளையுடைய கதைகளும் அவற்றில் நடமாடித்திரியும் ஜீவன்களும் இருப்பதையும் நாம் பார்க்கலாம். உதாரணமாக டிராகன்கள் ஐரோப்பிய தொன்மங்கள், மாயன் அஸ்டெக் நாகரீக கல்வெட்டுகள், சீனாவின் ஓவியங்கள், பாரசீக பண்டைய இலக்கியங்கள் இவைகளில் பறந்து கொண்டும், நீந்திக் கொண்டும், காடுகளிலும் மலைகளிலும் நெருப்பை சுவாசித்துக்கொண்டும் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பண்டைய இலக்கியங்களில் ஒன்றாக கருதப்படும் Beowulf கதைப்பாடல், அரேபிய கதைகளின் தொகுப்பான ஆயிரம் இரவுகள் ஓர் இரவு, கிழக்காசிய நாடுகளில் காணப்படும் பேய்க்கதைகள், ருஷ்ய நாட்டார் மரபின் பாபா யாகா இவற்றின் அடியே தோன்றிய டீராகுலா, Werewolf, சூனியக்கார கிழவி இன்னும் பல பேய்களை கருவாகக் கொண்டு நிறைய இலக்கியங்கள் தோன்றின. மற்றொரு வகையில் விஞ்ஞான கோட்பாடுகள் எழுப்பிய கேள்விகளை வைத்து உருவாகிய மேரி ஷெல்லியின் மன்ஸ்டர். ஸ்டிவன்ஸனின் மிஸ்டர் ஹைட், வெல்ஸின் டாக்டர் மூரே மற்றும் வேற்றுகிரகவாசிகள் என்ற ஹாரர் வகைமையும் தோன்றியது. இது பிற்பாடு விஞ்ஞான புனைவுகளாக மாற்றம் கொண்டது. Edgar Allan Poe, Marry Shelly, R.L. Stevenson, H.G. Wells, Bram Stoker, H.P. Lovecraft … போன்றவர்களை இவ்வகை இலக்கியத்தின் முன்னோடிகளாக கொள்ளலாம். மனிதனின் அகவுலக பயத்தை சித்தரித்தில் எட்கர் அலன் போ முக்கியமானவர். அவரின் படைப்புகளில் காணப்படும் இருண்மை மனிதனின் பய உணர்வை அப்படியே கண்முன் நிறுத்தியது. மனிதனிடம் இயல்பாய் வெளிப்படும் பய உணர்வு சார்ந்த கதைகள் தனியாக வீட்டில் இருக்கும் போது, அசையும் திரைச்சீலைகளின் பின்னால் என்ன இருக்கின்றது, கதவு மெதுவாக சாத்தப்படும் போது உண்டாகும் ஒலி, பழைய தரையில் நடக்கும் போது உண்டாகும் எதிரொலி, நள்ளிரவு கடிகார டிக் டிக் என்று அமானுஷ்யம் பிடித்துக்கொண்ட வீடுகளாகவும், தனியான ஒரு பயணத்தின் போது எதிர்ப்படும் முன்பின் தெரியாத நபர் பற்றிய பயங்களாகவும், தூங்கும் போது தூரத்தில் கேட்கும் நாய்களின் ஓலமாகவும், இறந்தவர்களின் புகைப்படங்களின் கண்களும் (ஏன் கழிவறையிலிருந்து வந்து தூக்கிச் செல்லும் மன்ஸ்டர்களும்) என்று இந்த இலக்கியங்கள் அதற்கேயுரிய உலகை கொண்டிருந்தன. இவ்வாறான தொன்மங்கள், நாட்டாரியல் மரபுகள், காதிக் நாவல்கள் போன்ற இலக்கிய பின்னணியிலிருந்து திகில் சினிமாவின் தோற்றம் உருவாகியது. சினிமாவின் வேறெந்த வகைமைகளையும் விட நேரடி இலக்கியத்தாக்கம் கொண்ட வகைமையாக ஹாரர் சினிமா இருக்கின்றது. இதற்கான காரணத்தை மேற்சொன்ன பின்னணியிலிருந்தும் சினிமாவின் மிகவும் ஆரம்பகால படைப்புகளிலிருந்தும் கண்டுகொள்ளலாம்.



ஜோர்ஜஸ் மெலிஸின் Le Manoir du diable (1890)  ஹாரார் சினிமாவின் முன்னோடி எனக் கொள்ளப்படுகிறது. ஹாரர் படங்களின் முக்கிய பாத்திரமான மன்ஸ்டர்களின் வருகை எடிசன் கம்பனியினால் தயாரிக்கப்பட்ட படமான Frankenstein (1910) மூலம் துவங்குகிறது.  Frankenstein’s மன்ஸ்டருக்கு பிறகு சினிமாவில் தோன்றிய மன்ஸ்டர் விக்டர் ஹியுகோவின் ஹன்ச்பெக். (Hunchback of Norte’ dame நாவலின் பாத்திர படைப்புக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை - அந்த காவிய / சோக நாயகனை அரக்கனாக சித்தரித்தது ஹாலிவூட்) இந்த பாத்திரம் பின்னர் பல படங்களில் தலைகாட்டத் துவங்கியது. ஜப்பான் சமகாலத்தில் முக்கியமான ஹாரர் படங்களையும் இயக்குனர்களையும் கொண்ட நாடு (மற்றும் ஏனைய கிழக்காசிய நாடுகளான கொரியா, தாய்வான்) ஹாரரை horrific ஆக காட்டுவதில் விற்பன்னர்கள். நாட்டுபுற பேய்கதைகளுக்கும் பேய்களுக்கும் பஞ்சமேயில்லாத நாடுகள் இவை. இங்கு திகில் படங்கள் ஆரம்பகால முதலே வரத்துவங்கிவிட்டது. அதில் Bake Jizo மற்றும் Shinin no Sosei (1898) குறிப்பிடத்தக்கவை. மேற்சொன்ன படங்கள் ஹாரர் சினிமாவுக்கான முழுமையான இலக்கணங்களை கொண்டிருந்ததாக கூறமுடியாது.

ஹாரர் சினிமாவில் பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்திய ஜேர்மன் எக்ஸ்ப்ரஸனிஸ திரைப்படங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

- Omar Sheriff 

Note: 

Thanks to Simorgh members
Thanks to திரைப்பட காதலர்கள் குழுமம்

No comments:

Post a Comment