Saturday, June 1, 2013

சிமோர்க் ஒரு அறிமுகம்



It was in China, late one moonless night,
The Simorgh first appeared to mortal sight –
He let a feather float down through the air,
And rumours of its fame spread everywhere; (Farid-ud-deen Atthar, The Conference of Birds)
இஸ்லாத்தில் இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் மிக முக்கிய இடமுண்டு. மனிதர்களின் சிருஷ்டிகர ஆற்றலை வெளிப்படுத்துவதால் இதனை மிக முக்கியமான பர்ளு கிபாயா (கூட்டுக்கடமை) என்பார் இமாம் கஸ்ஸாலி தனது இஹ்யாவு உலூமித்தீனில். இஸ்லாமிய நாகரீகத்தில் இதனடிப்படையிலான ஏராளமான சூபி, மாய யதார்த்த, நபி புகழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கலாச்சார நாகரீக இன மரபுகளைச் சேர்ந்த மக்களும் இவற்றுக்கு தம் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவற்றில் மிகவும் விதந்துரைக்கப்படக் கூடிய வசன நடை காவியங்களில் ஒன்றே பிரசித்திபெற்ற பாரசீக மெய்ஞானியும் கவிஞருமான இமாம் பரீத்துதீன் அத்தாரின் மந்திக் அத்தைர். (பறவைகளின் மாநாடு)

மனிதர்களை பறவைகளாக உருவகித்து இறைவனை அடையும் பாதையிலுள்ள தடைகளை பள்ளத்தாக்குளாக சித்தரித்து கடைசியில் இலக்கை அடையும் பறவைகளின் சாகஸத்தை கூறுவதே மந்திக் அத்தைர் காவியம். பறவைகள் அடைய வேண்டிய இறுதி இலக்கே பறவைகளின் அரசன் சீமோர்க்”.

சினிமா ஒரு அற்புதமான ஊடகம். மனித அறிவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கொடை. நவீன தொழில்நுட்பம் சாத்தியப்படுத்திய அருமையான கண்டுபிடிப்பு. பிரச்சாரம், கருத்துமாற்றம், சமூக மாற்றம் என்பவற்றிற்கு பெரும் பயனளிப்பது. இதனாலேயே அனைத்து நாடுகளும் சமூகங்களும் தனக்கே உரிய இயல்பை கொண்ட வகையில் தமக்கான சினிமாத்துறையை கொண்டுள்ளது. இதன் பாதிப்பு உலகளாவிய மட்டத்தில் கலை, சிந்தனை துறையிலும் சில சமூகங்களில் அரசியலிலும் கூட இதன் பாதிப்பு பிரத்தியச்சமாக வெளிப்படுகின்றது.

இதன் பின்னணியில் எமது சமூகங்களுக்கு வருவோம். (இங்கு குறிப்பிடப்படுவது தமிழ் பேசும் இரு பெரும் சமூகங்களான இலங்கை / தமிழ்நாட்டு முஸ்லிம்களும் தமிழர்களுமே) இவ்வளவு அற்புதமான கலையை எவ்வளவு மலினமாகவும் விடலைத்தனமாகவும் மாற்றி வைத்திருக்கின்றோம்? கண்மூடித்தனமான கதாநாயக வழிபாடு, மூன்றாம் தரமான நகைச்சுவை, மட்டரகமான பாடல்கள், பொருளற்ற வன்முறை, ஆண்-பெண் சேர்க்கையை வெறும் உடல் சார்ந்த காமமாகக் காட்டும் இழிவு போன்ற இன்னோரன்ன அழிவுக் கூறுகளையும் தன்னுள் பொதிந்து ஒரு மகத்தான ஊடகத்தை சமூக விரோத கலையாக உருமாற்றியிருக்கிறது.

இதற்கு மாறாக உலக சினிமாவின் நிலை எது? ஏன் ஐரோப்பிய சினிமாவின் மகத்தான கலைஞர்களான பசோலினி, கோடார்ட், பெர்க்மன், கின்ஸ்கி, ஸ்டராரோ, பென்ரிகி போன்ற ஆளுமைகளை எம்மால் உருவாக்க முடியவில்லை? அவர்களது திரைப்படங்களிலுள்ள வீரியம் எம்மிடம் எங்கே போனது? அமெரிக்க சீரழிவு கலாச்சாரத்தை பரப்பும் ஹாலிவூட் கூட தன்னுள் குப்ரிக், ஸ்கார்ஸஸி, ஜான் வில்லியம்ஸ் போன்ற மாபெரும் ஆளுமைகளை கொண்டுள்ளதே. அது போன்று ஏன் எம்மால் முடியவில்லை? எமது சமூகங்களையும் விட வறுமை நிலையில் இருக்கும் லத்தின் அமெரிக்காவோ உலகமே வியந்து போற்றும் கலைஞர்களையும் திரைப்படங்களையும் கலையுலகிற்கு அளித்துள்ளது. எமக்கு முன்னால் பிரமாண்டமாக குவிந்திருக்கும் கலைப்படைப்புகளையும் அனுபவத்திரட்சிகளையும் கொண்டு எமக்கான மாற்று சினிமாவை உருவாக்க வேண்டியது ஒரு கலாச்சார தேவையும் அவசியமும் ஆகும். இதற்கு முதற்கண் நல்ல, தரமான, மாற்று சினிமாவை ரசிக்கக் கூடிய மனோபாவத்தை எம்மில் கொண்டுவர வேண்டும் என்று சீமோர்க் கருதுகிறது. நல்ல ரசனை, தேர்ந்த அறிவு, கூர்மையான பார்வை உள்ளவர்களிடமிருந்தே நல்ல சினிமா தோன்ற முடியும்.

நல்ல சினிமாவை ரசிப்பதற்கு தடைக்கற்களாக எமக்கு முன்னால் நிற்பவையே ஹாலிவூட் வணிக சினிமாவும், தமிழ், ஹிந்தி கேளிக்கை சினிமாவும் ஆகும். இத்தகைய அபாயகரமான பள்ளத்தாக்குகளை கடந்தே நல்ல சினிமா எனும் சீமோர்க் வீற்றிருக்கிறது. அத்தாரின் மந்திக் அத்தைர் காவியத்தில் வரும் பறவைகளை போன்றே நாம் அதை அடைய விழைகின்றோம்.

- Lafess Shaheed / Omar Sheriff

No comments:

Post a Comment